Tuesday, August 9, 2011

வளர்த்தி

ஆறு வயதில் கொள்ளை ஆசையாய்
 நான் கையில் ஏந்திய என் தங்கச்சி பாப்பா ,
என்னை விடவும் உயர  வளர்ந்து
 என் கைப்பிடித்து நடப்பதற்கு யோசிப்பதும்...

பால்குடித்தபின் நுரை மீசையை அம்மாவிடம் காட்ட,
அவர்கள் முன்போல்  கன்னம் கிள்ளி முத்தம் வைக்காமல்,
 "இன்னுமா " என மனதுக்குள் பெருமூச்சு விடுவதும்...

அப்பாவின் வயிற்றின்மேல் தலை வைத்து பள்ளிக்கூட கதை
முழுவதும் சொல்லி முடிக்கும் ஞாபகம் ,
இப்பொழுது முடியாதென்ற எண்ணத்தை உதடுகள் உச்சுகொட்டி  உணர்த்துவதும்...

இன்னொரு வீட்டில் குப்பைக்கொட்ட
 நேரம் வந்ததென ஊர் சொல்லும்போது
மனதில் பயம் கவ்வுவதும்,  
கண்களில் நீர் தளும்புவதும்...

தோழியின் தந்தை மறைந்த வீட்டில்,
அவளருகில் என் தந்தைக்காக அடக்கமுடியாத
அழுகை வந்ததும் ...

வரவர எனக்கு ஏனோ வளர்த்தி என்பதே பிடிக்காமல் போய் விட்டது.

1 comment: